16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த கணவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கயத்துார் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன்,31; விவசாயி. இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 2019ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.அதன் பிறகு மணப்பெண்ணை, ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், புகார் அளித்த பெண் 16 வயது சிறுமி என்பதும், குழந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்தியது தெரிய வந்தது.அதன்பேரில், ஜானகிராமன், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் லட்சுமி, சிறுமியின் சித்தி தனலட்சுமி, தந்தை வீரபத்திரசாமி ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஜானகிராமனுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், திருமணம் நடத்தி வைத்த தனலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, லட்சுமி, வீரபத்திரசாமி ஆகியோருக்கு குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் தலா, 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
No comments